குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
'I've nought' is ne'er the high-born man's reply; He gives to those who raise themselves that cry
அதிகாரம் - 23 - ஈகை
மு.வரதராசன் விளக்கம்
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
பரிமேலழகர் விளக்கம்
'இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் - அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே. (மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்' எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் 'எனக்கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.