குறள் 219:

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none
அதிகாரம் - 22 - ஒப்புரவறிதல்
மு.வரதராசன் விளக்கம்
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.
பரிமேலழகர் விளக்கம்
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.