குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay
அதிகாரம் - 21 - தீவினையச்சம்
மு.வரதராசன் விளக்கம்
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.