குறள் 20:

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'
அதிகாரம் - 2 - வான்சிறப்பு
மு.வரதராசன் விளக்கம்
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது