குறள் 197:

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

Let those who list speak things that no delight afford, 'Tis good for men of worth to speak no idle word
அதிகாரம் - 20 - பயனில சொல்லாமை
மு.வரதராசன் விளக்கம்
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம் ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
பரிமேலழகர் விளக்கம்
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.