குறள் 193:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains
அதிகாரம் - 20 - பயனில சொல்லாமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.