குறள் 182:
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smile
அதிகாரம் - 19 - புறங்கூறாமை
மு.வரதராசன் விளக்கம்
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு,அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
பரிமேலழகர் விளக்கம்
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.