குறள் 180:

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still
அதிகாரம் - 18 - வெஃகாமை
மு.வரதராசன் விளக்கம்
வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும்,அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
பரிமேலழகர் விளக்கம்
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]
சாலமன் பாப்பையா விளக்கம்
பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.