குறள் 165:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate
அதிகாரம் - 17 - அழுக்காறாமை
மு.வரதராசன் விளக்கம்
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்