குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain
அதிகாரம் - 16 - பொறையுடைமை
மு.வரதராசன் விளக்கம்
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப்பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.