குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best
அதிகாரம் - 16 - பொறையுடைமை
மு.வரதராசன் விளக்கம்
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்