குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise
அதிகாரம் - 2 - வான்சிறப்பு
மு.வரதராசன் விளக்கம்
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
பரிமேலழகர் விளக்கம்
கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை. ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்