குறள் 146:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these four
அதிகாரம் - 15 - பிறனில் விழையாமை
மு.வரதராசன் விளக்கம்
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை,தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
பரிமேலழகர் விளக்கம்
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.