குறள் 143:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things devise
அதிகாரம் - 15 - பிறனில் விழையாமை
மு.வரதராசன் விளக்கம்
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
பரிமேலழகர் விளக்கம்
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்