குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
பரிமேலழகர் விளக்கம்
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.