குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in 'decorum due,' birthright's gone for evermore
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்புச் சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
பரிமேலழகர் விளக்கம்
ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.