குறள் 1321:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு.
Although there be no fault in him, the sweetness of his love Hath power in me a fretful jealousy to move
அதிகாரம் - 133 - ஊடலுவகை
மு.வரதராசன் விளக்கம்
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.)அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.