குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
Searching, duly watching, learning, 'decorum' still we find; Man's only aid; toiling, guard thou this with watchful mind
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.