குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
'While here I live, I leave you not,' I said to calm her fears She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears
அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்
மு.வரதராசன் விளக்கம்
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
"இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்" என்று நான் சொன்னவுடன் "அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?" எனக் கேட்டுக் கண்கலங்கினாள் காதலி.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.