குறள் 1311:

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind, I shrink from thine embrace
அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்
மு.வரதராசன் விளக்கம்
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.
பரிமேலழகர் விளக்கம்
(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.