குறள் 1305:
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lacks not a lovely grace
அதிகாரம் - 131 - புலவி
மு.வரதராசன் விளக்கம்
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.