குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain
அதிகாரம் - 2 - வான்சிறப்பு
மு.வரதராசன் விளக்கம்
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்