குறள் 1295:

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain
அதிகாரம் - 130 - நெஞ்சொடுபுலத்தல்
மு.வரதராசன் விளக்கம்
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.
பரிமேலழகர் விளக்கம்
(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சம் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும் , 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.