குறள் 1292:

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

'Tis plain, my heart, that he 's estranged from thee; Why go to him as though he were not enemy
அதிகாரம் - 130 - நெஞ்சொடுபுலத்தல்
மு.வரதராசன் விளக்கம்
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!