குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
As those of rescue sure, who plunge into the stream, So did I anger feign, though it must falsehood seem
அதிகாரம் - 129 - புணர்ச்சிவிதும்பல்
மு.வரதராசன் விளக்கம்
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?