குறள் 1283:

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

Although his will his only law, he lightly value me, My heart knows no repose unless my lord I see
அதிகாரம் - 129 - புணர்ச்சிவிதும்பல்
மு.வரதராசன் விளக்கம்
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.