குறள் 128:

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing
அதிகாரம் - 13 - அடக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.