குறள் 1277:
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
My severance from the lord of this cool shore, My very armlets told me long before
அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது,உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.