குறள் 1270:

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

What's my return, the meeting hour, the wished-for greeting worth, If she heart-broken lie, with all her life poured forth
அதிகாரம் - 127 - அவர்வயின்விதும்பல்
மு.வரதராசன் விளக்கம்
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போய்விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.