குறள் 1265:

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies
அதிகாரம் - 127 - அவர்வயின்விதும்பல்
மு.வரதராசன் விளக்கம்
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.