குறள் 1263:

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

On victory intent, His mind sole company he went; And I yet life sustain And long to see his face again
அதிகாரம் - 127 - அவர்வயின்விதும்பல்
மு.வரதராசன் விளக்கம்
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.