குறள் 1257:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
No sense of shame my gladdened mind shall prove, When he returns my longing heart to bless with love
அதிகாரம் - 126 - நிறையழிதல்
மு.வரதராசன் விளக்கம்
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.
பரிமேலழகர் விளக்கம்
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.