குறள் 1254:

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veil
அதிகாரம் - 126 - நிறையழிதல்
மு.வரதராசன் விளக்கம்
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.