குறள் 1249:
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find
அதிகாரம் - 125 - நெஞ்சொடுகிளத்தல்
மு.வரதராசன் விளக்கம்
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து, அதனை ஒழி' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?