குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurable
அதிகாரம் - 125 - நெஞ்சொடுகிளத்தல்
மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?
பரிமேலழகர் விளக்கம்
(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?