குறள் 1238:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
One day the fervent pressure of embracing arms I checked, Grew wan the forehead of the maid with golden armlet decked
அதிகாரம் - 124 - உறுப்புநலனழிதல்
மு.வரதராசன் விளக்கம்
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டுவிட்டது.
பரிமேலழகர் விளக்கம்
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!