குறள் 1236:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
I grieve, 'tis pain to me to hear him cruel chid, Because the armlet from my wasted arm has slid
அதிகாரம் - 124 - உறுப்புநலனழிதல்
மு.வரதராசன் விளக்கம்
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.
பரிமேலழகர் விளக்கம்
(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.