குறள் 1233:

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

These withered arms, desertion's pangs abundantly display, That swelled with joy on that glad nuptial day
அதிகாரம் - 124 - உறுப்புநலனழிதல்
மு.வரதராசன் விளக்கம்
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.