குறள் 1230:
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me
அதிகாரம் - 123 - பொழுதுகண்டிரங்கல்
மு.வரதராசன் விளக்கம்
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.