குறள் 1227:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour
அதிகாரம் - 123 - பொழுதுகண்டிரங்கல்
மு.வரதராசன் விளக்கம்
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.
பரிமேலழகர் விளக்கம்
('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.