குறள் 1220:
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town;
அதிகாரம் - 122 - கனவுநிலையுரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற நமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?