குறள் 1215:

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greet
அதிகாரம் - 122 - கனவுநிலையுரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.(இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.