குறள் 1207:
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
If I remembered not what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forget
அதிகாரம் - 121 - நினைந்தவர்புலம்பல்
மு.வரதராசன் விளக்கம்
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?