குறள் 1204:
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
Have I a place within his heart! From mine, alas! he never doth depart
அதிகாரம் - 121 - நினைந்தவர்புலம்பல்
மு.வரதராசன் விளக்கம்
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?