குறள் 1192:
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
As heaven on living men showers blessings from above, Is tender grace by lovers shown to those they love
அதிகாரம் - 120 - தனிப்படர்மிகுதி
மு.வரதராசன் விளக்கம்
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.