குறள் 1188:
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'
அதிகாரம் - 119 - பசப்புறுபருவரல்
மு.வரதராசன் விளக்கம்
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துப் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.
பரிமேலழகர் விளக்கம்
('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.