குறள் 1184:
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray
அதிகாரம் - 119 - பசப்புறுபருவரல்
மு.வரதராசன் விளக்கம்
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னை யறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
பரிமேலழகர் விளக்கம்
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?