குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm unbiassed equity of soul, is sages' praise
அதிகாரம் - 12 - நடுவு நிலைமை
மு.வரதராசன் விளக்கம்
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
பரிமேலழகர் விளக்கம்
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் - முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம். (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.