குறள் 1176:

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

Oho! how sweet a thing to see! the eye That wrought this pain, in the same gulf doth lie
அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்
மு.வரதராசன் விளக்கம்
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)
சாலமன் பாப்பையா விளக்கம்
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.