குறள் 1173:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile
அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்
மு.வரதராசன் விளக்கம்
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள்,இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத் தக்க ஒன்றாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.